தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, பெத்தேல் பகுதியில் போலீசார் நேற்று இரவு வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர், சோதனையில் இருந்து தப்பிச்சென்றார்.

உடனே போலீசார் அவரை விரட்டிச் சென்றனர். ஒருகட்டத்தில் பைக்கை விட்டுவிட்டு ஓடிய நபரை, துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர். அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கீழகாடுவெட்டி இந்திரா காலனி பகுதியை சேர்ந்த முகமூடி கொள்ளையனான சந்திரகுமார் (33) என்பது தெரியவந்தது.

சந்திரகுமாருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களில் வீடு, கடைகள் உடைத்தல், வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அவரிடம் இருந்து 3 டூவிலர்கள், அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர், கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சந்திரகுமாரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.