புனித ஹஜ் பயணம் செல்வதற்காக உரிய விசா, பாஸ் என அனைத்து ஆவணங்களையும் கச்சிதமாக வைத்திருந்த ஒரு தம்பதியை, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானத்தில் ஏற்ற மறுத்து அராஜகம் செய்துள்ளது. இதனால் போவதற்கும் வழியில்லாமல், போட்ட காசும் திரும்பக் கிடைக்காமல் அந்தத் தம்பதி இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே தவித்து அலைக்கழிக்கப்பட்டுள்ளனர். ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இந்த அநியாயமான செயலால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, ஸ்ரீநகர் நுகர்வோர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

​இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், சேவை குறைபாடு மற்றும் பயணிகளைத் தவிக்க விட்டதற்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு அதிரடியாக ரூ.62,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய பயணிகளை மதிக்காமல் அலட்சியம் காட்டும் பெரிய பெரிய விமான நிறுவனங்களுக்கு, இந்தத் தீர்ப்பு ஒரு சம்மட்டி அடியாகவும், நுகர்வோர்களுக்கான ஒரு பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.