விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு மாவட்ட வாரியாக செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. விஜய் ரசிகர் மன்றத்தின் மாவட்ட தலைவராக இருந்தவர்களின் பலர் தமிழக வெற்றிக்கழகம் மாவட்ட தலைவர்களாக செயலாற்றி வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருப்பவர் மலர்விழி ஜெயபாலா. நவம்பர் 21ஆம் தேதி ராமேஸ்வரத்தில் ஒரே நாளில் கனமழை கொட்டி தீர்த்ததால் மண்டபம், பாம்பன் மீனவர் குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்தது. அதிகாரத்தில் முக்கிய புள்ளியில் இருப்பவர்கள் மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்க ஏற்பாடு செய்தனர்.

ஆனால் மலர்விழி ஜெயபாலா இடுப்பளவு தண்ணீருக்குள் இறங்கி மீனவ குடிசைகளில் இருந்த மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் 200 பேருக்கு உணவு வழங்கினார். அது மட்டும் இல்லாமல் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் பணத்தை நிவாரண உதவியாக கொடுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 25-ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்று மாயமான சுரேஷ் என்பவரது மனைவியை அழைத்துக் கொண்டு மலர்விழி அவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வைத்தார்.

மலர்விழியின் செயல் மற்ற அரசியல்வாதிகளை யோசிக்க வைத்துள்ளது. அவர் கூறும் போது பெருசா ஒன்னும் இல்லங்க. தலைவர் விஜயின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். தலைவர் விஜய் திட்டமிட்ட பல நலத்திட்டங்களை ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைந்து செயல்படுத்த உள்ளோம். குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். முள்ளி முனை மீனவர் கிராம மக்கள் சாலை வசதி வேண்டும் என கேட்டார்கள். அரசு எதிர்பார்க்காமல் அவர்கள் கேட்ட சிறிய சாலையை நாங்களே ஏற்படுத்திக் கொடுத்தோம் எனக் கூறியுள்ளார்.