இன்றைய காலகட்டத்தில் மருத்துவத் துறை என்பது முற்றிலும் வணிகமயமாகிவிட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், மனிதநேயமே முக்கியம் என வாழ்ந்து காட்டும் சில மருத்துவர்கள் மக்களுக்குக் கடவுளாகத் தெரிகின்றனர். அப்படியொரு நெகிழ்ச்சியான சம்பவம் தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அரங்கேறியுள்ளது. அங்குள்ள பெட்ரோ என்ற ஏழை விவசாயி, கடுமையான புரோஸ்டேட் (Prostate) நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார்.

இதற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்ற நிலை இருந்தது. ஆனால், பல லட்சங்கள் செலவாகும் அந்தச் சிகிச்சைக்கு அவரிடம் போதிய பணம் இல்லை. தன்னிடம் காசு இல்லாததால் மரணத்தின் விளிம்பிற்குச் சென்ற அந்த விவசாயி, இறுதியாக டாக்டர் ஆல்வரோ ரமாலோ என்பவரிடம் உதவி கேட்டுத் தஞ்சமடைந்தார்.

விவசாயியின் ஏழ்மை நிலையைக் கண்டு உருகிய டாக்டர் ஆல்வரோ, தனது தந்தையின் பெயரில் நடத்தி வரும் ‘டாக்டர் ஜோஸ் ரமாலோ கில்லன்’ அறக்கட்டளை மூலமாக, அந்த விவசாயிக்குத் தேவையான அறுவை சிகிச்சை, மருந்து மாத்திரைகள், மருத்துவமனை கட்டணம் என அனைத்தையும் முற்றிலும் இலவசமாகச் செய்து முடித்தார். அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வீடு திரும்பிய விவசாயி பெட்ரோ, சில நாட்களுக்குப் பிறகு தனது கிளினிக்கிற்கு வந்ததைக் கண்டு மருத்துவர் ஆச்சரியமடைந்தார்.

தன்னிடம் காசு இல்லை என்றாலும், தனது நன்றியின் அடையாளமாகத் தான் ஆசையாக வளர்த்த இரண்டு தரமான கோழிகளை மருத்துவருக்குப் பரிசாகக் கொடுத்தார். விவசாயியின் இந்தத் தூய்மையான அன்பைக் கண்டு நெகிழ்ந்துபோன டாக்டர், அந்தக் கோழிகளுக்கு ‘ராமோன்’ மற்றும் ‘க்ளோடில்டே’ எனப் பெயரிட்டுத் தன் வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இதுகுறித்து பேசிய மருத்துவர், “முன்பு என் தந்தையும் ஏழை நோயாளிகளிடம் காசு வாங்காமல் முட்டைகளையும் கோழிகளையும் பரிசாகப் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிப்பார்.

மேலும் இதேபோன்று இன்று என் நோயாளி கொடுத்த இந்தப் பரிசு, உலகில் எத்தனையோ கோடிப் பணத்தை விட எனக்குப் பெரியது” எனக் கூறியுள்ளார். இந்த நெகிழ்ச்சியான கதை தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், உலகம் முழுவதும் உள்ள மக்கள் இந்த மனிதநேய மருத்துவருக்குத் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.