சென்னையில் சீரமைப்பு பணியின் காரணமாக குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை-திருவனந்தபுரம் இடையே உள்ள ரயில் பாதைகளில் பழுது நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆகஸ்ட் 4, 5, 8, 10 ஆகிய தேதிகளில் குருவாயூரிலிருந்து எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் மதுரைக்கு பதிலாக விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அதே வழிதடத்தில் எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் ரயில் ஆகஸ்ட் 8ஆம் தேதி மட்டும் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை எர்ணாகுளம், சோடலா, ஆலப்புழாவுக்கு பதிலாக கோட்டயம் வழியாக இயக்கப்பட உள்ளது. அதேபோல் மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயில் ஆகஸ்ட் 8ம் தேதி மதுரைக்கு பதிலாக புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து புனலூர்-மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக இந்த ரயில் ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் புனலூருக்கு பதிலாக திருநெல்வேலியில் இருந்து புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் மங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நிறுத்தப்படும் எனவும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மதுரை-ராமநாதபுரம் இடையே இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 5 முதல் 11ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு காரைக்குடிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 4 மணி நேரம் 15 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.