தலைநகர் டெல்லியையும் பொருளாதார தலைநகரமான மும்பையையும் இணைக்கும் வகையில் சுமார் ஒரு லட்சம் கோடி பட்ஜெட்டில் அதிவிரைவு சாலை அமைக்கப்பட இருக்கிறது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது. இந்த சாலை டெல்லி மும்பை மாநகரங்களுக்கு இடையே 1386 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட இருக்கிறது. இதுதான் இந்தியாவின் மிக நீளமான அதிவிரைவு சாலையாகும். இந்த சாலைக்காக டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 15 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திட்டங்களுக்காக நிலங்களை வழங்கியுள்ள விவசாயிகளுக்கு சந்தை விலையை விட 1 1/2 மடங்கு அதிக விலை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு 20 லட்சத்துக்கு அதிகமான மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 500 மீட்டர் இடைவெளிக்கு இடையே மழைநீர் சேகரிப்புக்காகவும் வசதிகள் செய்யும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையை அமைப்பதற்கு 10 கோடி மனித வேலை நாட்கள், வேலை வாய்ப்பினை வழங்கும். இந்த சாலை அமைப்பதற்கு 80 லட்சம் டன் சிமெண்ட் தேவைப்படும். இது ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்டில் 2 சதவீதம் ஆகும். இது 8 வழி அணுகலை கொண்டு கட்டமைக்கப்பட்ட பசுமைவழிச் சாலையாகவும் இருக்கும். இது எதிர்காலத்தில் 12 வழிச்சாலையாக மாற்றப்படும். இந்த சாலை அமைக்கப்பட்டால் டெல்லி-மும்பை இடையேயான பயண நேரம் 12 சதவீதம் குறையும். டெல்லி மும்பை இடையே தற்போது உள்ள பயண நேரம் 24 மணி நேரம் ஆகும். அதிவிரைவு சாலை அமைக்கப்பட்டால் 12 மணி நேரமாக பயண நேரம் குறையும்.

இதன் மூலம் வருடத்திற்கு 32 கோடி லிட்டர் எரிபொருளை சேமிக்க முடியும். 85 கோடி கிலோகிராம் கார்பன் டை ஆக்சைடு உமிழ்தலும் தவிர்க்கப்படும். இந்த பிரம்மாண்ட சாலையின் ஒரு பகுதி அமைக்கப்பட்டு விட்டது. சுமார் 246 கிலோ மீட்டர் தொலைவில் ரூ. 12,150 கோடிமதிப்பீட்டில் ஒரு சாலை அமைக்கப்பட்டுள்ளதால் இனி டெல்லிக்கும் ஜெய்ப்பூருக்கும் இடையேயான பயண நேரம் 5 மணி நேரத்தில் இருந்து 3 1/2 மணி நேரமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாலையை நேற்று பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார். மேலும் இந்த அதிவிரைவு சாலை பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.