நாட்டுக்காய்களில் ஒன்றான புடலங்காயை பலர் சாப்பிடுவதற்குத் தயங்குவது உண்டு. ஆனால், இந்த முறையில் புடலங்காய் தொக்கு செய்து கொடுத்தால், புடலங்காய் பிடிக்காதவர்கள் கூட மீண்டும் மீண்டும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சூடான சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள இந்தத் தொக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1, நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, பூண்டு – 10 பல், மிளகாய்த்தூள் – 3/4 ஸ்பூன், மல்லித்தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 2 சிட்டிகை, கடுகு, வெந்தயம், சீரகம் – தலா 1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை மற்றும் உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் புடலங்காயை நன்றாகக் கழுவி தோலை நீக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அதைத் துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டுத் தண்ணீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல தக்காளியையும் தனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, வெந்தயம், சீரகம் தாளிக்க வேண்டும். கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை மற்றும் தட்டி வைத்த பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்த புடலங்காயைச் சேர்த்து, அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, மூடி போட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
புடலங்காய் வெந்த பிறகு, அரைத்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து மறுபடியும் நன்றாகக் கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை மேலும் 5 நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான புடலங்காய் தொக்கு தயார்.
