கொழும்பு நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய இந்தியா – இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே களத்தில் பெரும் பரபரப்பு பற்றிக்கொண்டது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்  ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ இடையே ஏற்பட்ட மோதல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

போட்டியின் 17-வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிரடியாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் 45 ரன்கள் எடுத்திருந்தபோது இன்-எட்ஜ் முறையில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவுட்டாகி வெளியேறிய ஜெய்ஸ்வாலை நோக்கி இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ எரிச்சலூட்டும் வகையில் செண்ட்-ஆஃப் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெய்ஸ்வால், பெர்னாண்டோவை நோக்கித் திரும்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

நிலைமை கைமீறிச் சென்றபோது, ஜெய்ஸ்வால் பெர்னாண்டோவை நோக்கித் தலையால் முட்டும்  செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கை வீரரும் பின்வாங்காமல் பதிலடி கொடுக்க, இருவருக்கும் இடையே மோதல் முற்றியது. உடனடியாக இரு அணி வீரர்களும், இலங்கை அணியின் கேப்டன் தனஞ்செய டி சில்வாவும் களத்தில் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர். இந்தச் சம்பவம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகளின்படி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐசிசி விதிகளின் கீழ் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் வன்முறைச் செயல்கள் நிலை 4 குற்றங்களின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன.

 

அதாவது ஒரு வீரர் அல்லது நடுவர் மீது உடல் ரீதியான தாக்குதல் நடத்துவது. மைதானத்தில் வன்முறையில் ஈடுபடுதல், உதைப்பது, குத்துவது அல்லது மற்ற வீரர்களுடன் சண்டையிடுவது. இந்தக் குற்றங்கள் நரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடத் தடை அல்லது வாழ்நாள் தடை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்தச் சம்பவத்திற்கு நடுவர்கள் மற்றும் மேட்ச் ரெஃபரி என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையில், இந்தத் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, முதல் நாள் உணவு இடைவேளையின்போது 1 இழப்புக்கு 88 ரன்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.