தமிழ் சினிமாவில் வெளிவந்த நான் அவன் இல்லை என்ற திரைப்படத்தில் பெண்களை நடிகர் ஏமாற்றி பணம்  மற்றும் நகைகளை திருடுவார். அந்த திரைப்படத்தில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நிதீஷ் பாபு என்ற 31 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனக்கு திருமணமாகவில்லை எனக் கூறி சுமார் 4 பெண்களை திருமணம் செய்துள்ளார். இவர் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை 4-வதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐந்தாவது திருமணத்திற்கு ரெடியானார். இந்த விவரம் அவருடைய 4-வது மனைவிக்கு தெரிந்தது.

உடனடியாக அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து நிதீஷ் பாபுவை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பெண்களை திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணம் போன்றவற்றை ஏமாற்றி பறித்தது தெரிய வந்தது. முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை படித்த பிறகு தலைமறைவாகி விடுவார். அடுத்ததாக மற்றொரு பெண்ணுடன் பழகி திருமணம் செய்து ஏமாற்றுவார். இவர் கிட்டதட்ட 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 8 லட்ச ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இவர் மீது பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் இவர் இதேபோன்று இன்னும் எத்தனை பெண்களை ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.