கோலிவுட் சினிமாவில் புது படங்களின் வரத்து கடந்த மூன்று மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. வெளியான சில தமிழ் படங்களும் ரசிகர்களிடையே பெரிதளவில் சென்றடையாமல் மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே தியேட்டர்களில் ஓடின. அதில் பல படங்கள் தோல்வி படங்களாக கருதப்பட்டன. இந்நிலையில் தியேட்டர்களுக்கு மக்களை வரவைப்பதற்காக பழைய நல்ல படங்களை ரீரிலீஸ் செய்து வரும் வழக்கம் சமீபத்தில் அதிகரிக்க தமிழகத்தில் மலையாள சினிமாவின் ஆதிக்கம் ஓங்கியது.

இது வருகிற ஏப்ரல் மே மாதங்களிலும் தொடர்வது போல் தெரிகிறது. மலையாள சினிமாவில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிரேமலு, உள்ளிட்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஆவேசம் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மறுபுறம் கோலிவுட் சினிமாவை பொருத்தவரையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் கொடுத்த கில்லி திரைப்படம் தமிழக முழுவதும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அவர்களது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மே 1 ல் நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த மங்காத்தா திரைப்படம் தமிழகம் முழுவதும் ரீரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.