தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இந்த படத்திற்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்ட் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் மந்தி பிரியாணி சாப்பிட்ட 20 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதோடு ஒரு செவிலியர் உயிரிழந்தார்.

இதைக் குறிப்பிட்ட அல்போன்ஸ் புத்திரன் 15 வருடங்களுக்கு முன்பாக தன் வாழ்க்கையில் நடந்த ஒரு சோக சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். அதாவது என் நண்பர் ஷாரப் உதீன் எனக்கு ஷவர்மா சாப்பிடுவதற்கு வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்ட பிறகு எனக்கு கடுமையான உடல் நலக் கோளாறு ஏற்பட்டது. இதனால் என் பெற்றோர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்து ரூ. 70,000 வரை செலவு செய்து என் உயிரை காப்பாற்றினார்கள். இதனால் நான் என் நண்பன் மீது மிகவும் கோபப்பட்டேன். ஆனால் கெட்டுப்போன மற்றும் அசுத்தமான உணவு தான் என்னுடைய நிலைமைக்கு காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார்?. எல்லோரும் கண்களை திறந்து பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.