அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரான் மீது நடத்திய பயங்கர தாக்குதலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக உலக நாடுகளின் 5-ல் ஒரு பங்கு சரக்கு போக்குவரத்து நடக்கும் முக்கியப் பகுதியான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடி ஆக்கிரமித்ததால் உலகளவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அங்கு ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் குவாலிபாப், வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவான நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் மற்றும் கத்தார் நாட்டு அதிகாரிகளும் அங்குச் சென்றுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தபோது, பாகிஸ்தானிய ராணுவ தலைமை தளபதி அசீம் முனீர் மற்றும் அவரது குழுவினரைத் தாக்கி அழிக்க இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ திட்டமிட்டதாகப் பிரேசில் நிருபரும் புவிஅரசியல் நிபுணருமான பெப் எஸ்கோபார் கூறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தச் சதித்திட்டம் குறித்துத் தகவல் அறிந்த பாகிஸ்தான், இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்தே அழித்து விடுவோம் என அச்சுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிபுணர் பெப் எஸ்கோபாரின் இந்தத் திடுக்கிடும் தகவலைப் பாகிஸ்தானிய நிருபர்கள் முற்றிலும் மறுத்து, இதனைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.
