திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள உலுப்பகுடி கிராமத்தில் இருந்து நேற்று மாலை தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கே.பங்களா பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க பெண், 60 மதிக்கத்தக்க முதியவர், அவரது மகனான 15 வயது சிறுவன் ஆகியோர் பேருந்தில் ஏறினார்கள்.

அந்த பெண் பேருந்தின் முன்பக்க படிக்கட்டு அருகே அமர்ந்திருந்தார். அதிலிருந்து 5 இருக்கைகள் தள்ளி முதியவர் அமர்ந்திருந்தார். அந்த பேருந்து டி.வடுகப்பட்டி பிரிவில் நின்ற போது சில பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது அந்த முதியவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இதனை பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் தெரியவந்தது. அதாவது கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் தமயந்தி(42). அவரது கணவர் கோபி(50) ஆட்டோ டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் கோபிக்கும், அவரது அண்ணன் ராஜாங்கம் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை தொடர்பான வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தான் தமயந்தி சென்னையில் இருந்து ஊருக்கு வந்தார். இந்நிலையில் நிலப்பிரச்சனைக்கு தமயந்தி தான் காரணம் என நினைத்து அவரை கொலை செய்வதற்காக ராஜாங்கம் கண்காணித்து வந்தார். அன்றைய தினம் தனது தாயை பார்ப்பதற்காக தமயந்தி பேருந்தில் பயணம் செய்த போது ராஜாங்கம் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதனால் தலைமறைவான ராஜாங்கத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.