கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேக்கோடு மணப்பழஞ்சி பகுதியில் ஸ்ரீகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஸ்ரீகுமார் களியக்காவிளைக்கும் பாறசாலைக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளப்பகுதியில் நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ஸ்ரீகுமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ஸ்ரீ குமாருக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகள். ஸ்ரீ குமாரின் இரண்டு மகள்களும் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளனர். தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கவனித்து வந்த ஸ்ரீகுமார் இறந்ததால் அனைவரின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. எனவே பிள்ளைகளின் மேற்படிப்புக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.