புதிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் தற்போதுள்ள தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த தேவையான கருத்துருக்கள் அனுப்ப கோரி தொடக்க கல்வி இயக்குனர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தொடக்க மற்றும் உயர்தொடக்க நிலைகளில் உள்ள பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் பள்ளி வரைபட பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதன் பின் தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 201-ன் படி தேவையின் அடிப்படையில் புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டிய தொடக்கப் பள்ளிகளை கண்டறிந்து கருத்துக்களை ஜிஐஎஸ் வரைபடத்துடன் அனுப்பும் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் கோரப்பட்டுள்ளது. அதேபோல் புதிய தொடக்கப்பள்ளி மற்றும் தரம் உயர்த்தப்பட வேண்டிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ள குடியிருப்பு பகுதி சார்ந்த விவரங்களை புவியியல் தகவல் முறைமை வரைபடத்துடன் அளிக்க வேண்டும்.

புவியியல் தகவல் உரிமை பயன்படுத்தி தேவையான அடிப்படையில் திட்டமிடுதலுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வளமையம் சார்ந்த ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளரையும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.  அதேபோல் நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக்கு கட்டட வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கூடுதல் வகுப்பறைக்கான வசதி மற்றும் அடிப்படை வசதிகள் பற்றிய விவரங்கள் அளிக்க வேண்டும். புதிய தொடக்கப் பள்ளி தொடங்கும் போது போதிய மாணவர்கள் எண்ணிக்கை இருக்க வேண்டும். தங்களது மாவட்டத்தில் புதிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டிய பள்ளிகள் எதுவும் இல்லை என்றால் இன்மை என அறிக்கையை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.