வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் பிப்ரவரி 16-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, பெரும்பாலும் அமைதியாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மாநிலத்தில் கிட்டத்தட்ட 88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 28.14 லட்சம் வாக்காளர்களில் சுமார் 24.66 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள 9 மாநிலங்களில் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து முதலிடம் பிடித்துள்ளன.

திரிபுரா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மேகாலயா மற்றும் நாகாலாந்துடன் மார்ச் 2-ஆம் தேதி நடத்தப்படுகிறது. பெரும்பாலான கருத்து கணிப்புகளின்படி, திரிபுராவில் பாஜக 29-36 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (சிபிஎம்) மற்றும் காங்கிரஸின் போட்டிக் கூட்டணியை விட மிக அதிகம் என்று ஜீ நியூஸ்-மேட்ரைஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிபிஎம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி 13 முதல் 21 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்யோத் பிக்ரம் மாணிக்யா தேப் பர்மா தலைமையிலான திப்ரா மோதா கட்சி (டிஎம்பி) 11-16 இடங்களைக் கைப்பற்றும், மற்றவர்கள் மற்றும் சுயேச்சைகள் 0-3 இடங்களைப் பெறலாம் என கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, திரிபுராவில் பாஜக கூட்டணி 36 இடங்களைக் கைப்பற்றும் என்றும், இடது முன்னணி 6-11 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு கணக்கை கூட திறக்காமல் போகலாம் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது