பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி சென்னையில் வைத்து கோவை-சென்னை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்துள்ளார். புதன்கிழமை தவிர மற்ற ஆறு நாட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும். பகல் 11:50 மணிக்கு சென்னையை சென்றடையும். இதனையடுத்து சென்னையில் இருந்து 2:25 மணிக்கு புறப்பட்டு இரவு 8:15 மணிக்கு கோவைக்கு வந்தடையும். இந்த ரயில் இயக்கப்பட்ட நாள் முதல் முன் பதிவில் சாதனை படைத்திருக்கிறது. பயணிகளின் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தை 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்றடையும் ரயிலில் சாதாரண கட்டணமாக 1,365 ரூபாயும், எக்ஸிக்யூடிவ் கட்டிடமாக, 2,485 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாட்டிலேயே அதிவேகமாக இயக்கப்படும் ரயில்களில் கோவை சென்னை வந்தே பாரத் ரயில் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கோவை சென்னை வந்தே பாரதி ரயில் ஜோலார்பேட்டை வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை வரை 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு சராசரியாக மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.