தமிழக ஆளுநர் ரவி திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடல் ஆட்சியை காலாவதியான மாடல் என்றும் தேச நலனுக்கு எதிரான மாடல் என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழக அரசின் இரண்டு வருட சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் தமிழக மக்களுக்காக ஓய்வின்றி என் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உங்களுடைய மகிழ்ச்சியும் புன்னகையுமே அதற்கு பதில் சொல்கிறது. சாதியால், மதத்தால், அதிகாரத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் பற்றி புரியாது. தமிழ்நாட்டில் உள்ள அறிவார்ந்த மக்களுக்கு திராவிட மாடல் என்ன என்று நன்றாக தெரியும். மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பதவிகளில் இருப்பவர்களை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சியின் முகம் என்பது அன்பு, ஜனநாயகம், எளிமை மற்றும் சமூக நீதி. அதனால்தான் சிலரால் நாம் விமர்சிக்கப்படுகிறோம் என்று ஆளுநரின் பேச்சுக்கு மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.