தமிழக மருத்துவ துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா. சுப்பிரமணியன். இந்நிலையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் 2023 என்ற பெயரில் கின்னஸ் சாதனை ஓட்டத்துக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எனக்கு 25 வருடங்களுக்கு முன்பு சுகர் வந்தது. அப்போது மருத்துவர்கள் நல்ல உடற்பயிற்சி மற்றும் அளவான சாப்பாடு எடுத்துக் கொண்டாலே சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்து விடும் என்றார்கள். ஆனால் என்னுடைய நண்பர்கள் சுகர் வந்துவிட்டதால் இனி 20 வருஷம் தான் உயிரோடு இருப்பாய் என்று கூறினார்கள்.

நான் சர்க்கரை வியாதியை விரட்ட வேண்டும் என்பதற்காகத்தான் மாரத்தான் ஓடுகிறேன். அந்த சமயத்தில் நான் ஒரு பெரிய விபத்தில் சிக்கினேன். அப்போது என்னுடைய மூட்டி எலும்புகள் 6 துண்டுகளாக நொறுங்கி போனது. தலையிலும் பலத்த அடி. அந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் தான் காவேரி மருத்துவமனையில் சேர்த்து என் உயிரை காப்பாற்றினார். இனி என்னால் எழுந்து நடக்கவே முடியாது என்று அப்போது கூறினார்கள். ஆனால் நான் தன்னம்பிக்கையோடு வாக்கர் உதவியோடு நடந்து பின் தானாகவே நடக்க விட்டேன். இதுவரை நான் 139 மாரத்தான்களில் ஓடியுள்ளேன். 63 வயது கிழவன் என்னாலயே ஓட முடிகிறது என்றால் இளைஞர்களாகிய உங்களால் ஏன் முடியாது. தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று கூறினார்.