தமிழ் சினிமாவில் பலவிதமான கானா& ராப் பாடல்கள் பாடுவதன் மூலம் மிகவும் பிரபலமானவர் அசல் கோலார். தற்போது இவர் குடியுரிமை அதிகாரிகள் மீது புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சென்னையில் வசித்து வரும் அசல் கோலார் தனது மலேசிய நண்பரை குடியுரிமை அதிகாரிகள் கீழ்த்தரமாக நடத்தியதாக செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் நண்பன் மலேசியா சிட்டிசன் ஆவார். அவர் கடந்த இரண்டு மாதமாக என்னுடன் சென்னையில் தங்கியிருக்கிறார்.

அவர் முறையாக டூரிஸ்ட் விசாவில் சென்னைக்கு வந்தார். ஆனால் டூரிஸ்ட் விசா காலாவதியான நிலையில் அதனை புதுப்பிக்க முயற்சி செய்தார். அதற்காக என் நண்பர் பல அலுவலகங்களுக்கு சென்று விசாரித்துப் பார்த்தார். அப்போதுதான் எங்களுக்கு டூரிஸ்ட் விசாவை கால நீட்டிப்பு செய்ய முடியாது என்று தெரியவந்தது. இதற்காக நாங்கள் குடியுரிமை அலுவலகம் வந்தபோது அங்குள்ள அதிகாரிகளிடம் இது தொடர்பாக விசாரித்தோம்.

அதற்கு அவர்கள் என் நண்பனை பார்த்து எங்கு தங்கியிருக்கிறார் என்று கேட்டதும் நான் என்னோடு என் வீட்டில்தான் தங்கி உள்ளார் என்று கூறினேன். அதற்கு அவர்கள் என் நண்பரை ஒரு தனி அறைக்குள் அழைத்து சென்று அடித்து துன்புறுத்தியது மட்டுமில்லாமல் கீழ்த்தரமாக பேசி இருக்கிறார்கள். கஞ்சா வச்சிருக்கியா என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையை நான் பிரபலமாக இருப்பதால் எளிதாக செய்தியாளர்கள் உதவியுடன் எதிர்கொண்டேன். ஆனால் சாமானிய மக்களுக்கு இவ்வாறு நடந்தால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர் கேள்வி எழுப்பி பேசி உள்ளார். மேலும் இது குறித்து குடியுரிமை அதிகாரிகள் மீது அவர் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.