விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்மந்தூரில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான பொன்னுசாமி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தனக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தி பலமுறை விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. இதற்கு பிறகும் வேலை கிடைக்காமல் போனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் சமாதானப்படுத்தினர்.

அப்போது பொன்னுசாமி கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வேலைவாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பல அரசு பணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டும், எனக்கு வேலை வழங்கப்படவில்லை. என்னுடன் நேர்காணலில் கலந்து கொண்ட அனைவரும் பணியில் சேர்ந்துவிட்டனர். மேலும் பணம் இல்லாத காரணத்தால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுக்கும், தமிழக முதலமைச்சருக்கும் ஏராளமான மனுக்கள் அனுப்பியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவரை போலீசார் தாலுகா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர்.