நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை  சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ராகேஷ் கண்ணன் பட்டியலின மக்களை தடுத்து நிறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விசிக கட்சியினர் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் எழுத்தாளராக பணியாற்றி வந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவர்களை  ஒருமையில் பேசி அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர் பாலமுருகனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் பணியிடம் நீக்கம் பணியிட நீக்கம் செய்துள்ளார். இதனிடையே பாலமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தி நேற்று நாமக்கல் மாவட்ட பூங்கா சாலையில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமையை அனைத்து கோவில்களிலும் உறுதிப்படுத்திட வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.  மாவட்ட செயலாளர் பழ.மணிமாறன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கட்சியின் முதன்மை செயலாளர் பாவரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கட்சியின் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.