
‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் பேசிய கருத்துகள் தற்போது கர்நாடக மாநிலத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “தமிழிலிருந்து தான் கன்னடம் தோன்றியது” என அவர் கூறியதையடுத்து, கர்நாடக அரசியல் தலைவர்கள், பிரச்சார அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
குறிப்பாக, கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் பேனர்கள் கிழிக்கப்படும் அளவிற்கு போராட்டங்கள் நடந்துள்ளன. இதற்கிடையில், கர்நாடக அமைச்சர் சிவராஜ், கமலஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் ‘தக் லைஃப்’ படத்தை தடை செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கேரளாவில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மீண்டும் கருத்து தெரிவித்த கமலஹாசன், “நான் பேசுவது அன்பின் அடிப்படையில்தான். வரலாற்று அறிஞர்கள் எனக்குக் கற்பித்ததையன்றி வேறு எதுவும் பேசவில்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் அனைத்து சமூகத்தினரும் முதலமைச்சராக முடிந்திருக்கிறார்கள்.
இது போன்ற நடைமுறை வேறு எந்த மாநிலத்திலும் இல்லை” என்றார். மேலும், “கர்நாடகாவில் பிறந்து தமிழக முதல்வராகிய ஒருவர் பிரச்சனையில் சிக்கியபோது, அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் கன்னட மக்கள்தான். எனவே, என்னையும் என் படத்தையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.
மொழி விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு தகுதி இல்லை என்றும், கல்வி அறிவும் இல்லை என்றும் தெரிவித்த கமல், “இது என்னுடைய பதில் அல்ல, விளக்கம் மட்டுமே. அன்பிற்கு மன்னிப்பு கேட்க தேவையில்லை” என தெளிவாக கூறியுள்ளார்.
கன்னடர்கள் தெற்கு மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களா என்பது போன்ற விவாதங்களை வரலாற்று வல்லுநர்கள் முடிவு செய்யட்டும் என்றும், இது போன்ற விவாதங்களில் அரசியல்வாதிகள் பங்கேற்கக் கூடாது என்றும் கமல் தெரிவித்து உள்ளார்.