கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக டேவிட் சந்திரபோஸ் என்பவர் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் சந்திரபோஸ் ஓய்வு பெற்றதால் பிரிவு உபசார விழா நாகர்கோவில் கோட்டாரில் இருக்கும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் நிலையத்தில் நடந்தது. இந்த விழாவில் போலீசார் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை வாழ்த்தியுள்ளனர். பின்னர் சக போலீசார் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாரானார்கள். அப்போது இன்ஸ்பெக்டர் அருண் தனக்காக ஒதுக்கப்பட்டுள்ள போலீஸ் காரில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் சந்திரபோசை அழைத்துச் சென்று வீட்டில் விடுமாறு கேட்டுக் கொண்டார்.

பொதுவாக காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கார் வழங்குவது இல்லை. முன் இருக்கையில் இன்ஸ்பெக்டர், துணை சூப்பிரண்டு போன்ற அதிகாரிகள் மட்டும்தான் அமர்ந்து செல்வார்கள். ஆனால் பணியில் இருந்து ஓய்வு பெறுவதால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் வாகனத்தில் இன்ஸ்பெக்டர் இருக்கையில் அமர வைத்து அழைத்துச் சென்று கௌரவப்படுத்த வேண்டும் என இன்ஸ்பெக்டர் அருண் ஆசைப்பட்டார். இதற்கு முதலில் டேவிட் சந்திரபோஸ் மறுப்பு தெரிவித்தார். ஆனால் இன்ஸ்பெக்டரின் உத்தரவின் படி சக போலீசார் டேவிட் சந்திரபோசை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணை பாராட்டி வாழ்ந்து தெரிவிக்கின்றனர்.