ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே தற்போது போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 18000 பேர் நாடு திரும்பினர். இவர்கள் மீண்டும் உக்ரைனுக்கு திரும்ப முடியாத சூழல் இருப்பதால், இந்தியாவில் தங்களுடைய மருத்துவ படிப்பை தொடர அனுமதி தர வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வினை இந்தியாவில் எழுதுவதற்கு ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி எம்பிபிஎஸ் இறுதியாண்டு தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் செய்முறை தேர்வு போன்றவற்றுக்கு ஒரு முறை அனுமதி கொடுக்கப்படும்.‌ இதற்காக அவர்கள் வேறு எந்த மருத்துவக் கல்லூரியிலும் சேர வேண்டாம். இந்திய எம்பிபிஎஸ் பாடத்திட்டத்தின் படி எழுத்து தேர்வு நடைபெறும். இதற்கான பயிற்சிக்கு சில குறிப்பிட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி வழங்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் 2 வருடம் கட்டாய சுழற்சி பயிற்சி பெற வேண்டும்.

இவர்களுக்கு முதல் வருடம் எந்த உதவி தொகையும் வழங்கப்படாது. ஆனால் இரண்டாம் வருடத்தில் உதவி தொகை வழங்கப்படும். இந்த முடிவை தேசிய மருத்துவ கமிஷன் எடுத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் உக்கரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது என மத்திய அரசு கூறிய போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.