பிரபல நடிகரான விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகி விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்ததாக ஹச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இது விஜயின் 69-ஆவது படமாகும். இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி விஜய் முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியையும் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
விஜய் நடிக்கும் படத்தில் பிரேமலு பட நடிகை நமீதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்த சிம்ரன் விஜயின் 69 ஆவது படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய் சிம்ரன் நடிப்பில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கதாகும்.