நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாமக்கல் நல்லியபாளையம் போலீசில் புகார் கொடுக்க சென்றுள்ளனர். அங்கு நிலையை எழுத்தாளராக பணிபுரிந்து வரும் சிறப்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அவர்களை ஒருமையில் பேசி அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து விசிக கட்சியினர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் புகார் கொடுக்க வந்த நபர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளவில்லை எனவும் அநாகரீகமாக நடந்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.