காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத்தலைவர் அபிஷேக் மனு சிங்வி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது “பொருளாதாரம், சமூகம், அரசியல், சீன எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களில் ராகுல் உண்மையை பேசினார்.

இதன் காரணமாக மத்திய அரசு அச்சமடைந்து உள்ளது. ராகுல் காந்தியின் குரலை நெறிக்க மத்திய பா.ஜ.க அரசு புது வழிமுறைகளை கண்டுபிடித்துவருகிறது. இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை கூட கேட்கவில்லை. சட்டத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இவ்விவகாரத்தை சட்டப்படி சந்திப்போம்” என்று அவர் கூறினார்