தூத்துக்குடி மாவட்டத்தில் விஏஓ லூர்து பிரான்சிஸ் தாமிரபரணி ஆற்றில் நடைபெற்ற மணல் கொள்ளை குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் அவரை அலுவலகத்தில் நுழைந்து மணல் கொள்ளையர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சியில் மணல் கொள்ளை என்பது அதிகரித்துவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு மணல் கடத்தப்படுவதாகவும், சட்டவிரோதமாக மாநில முழுவதும் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

திமுகவினரின் ஆதரவுடன் பல இடங்களில் மணல் கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது என்பதுதான் உண்மை. ஒரு வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி என்று அளவில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தற்போது கொலை செய்யப்பட்ட விஏஓ லூர்து பிரான்சிஸ் பணி மாறுதல் கேட்டு விண்ணப்பித்த போதிலும் அவருக்கு பணி மாறுதல் வழங்கப்படவில்லை. வேலை அவருக்கு பணி மாறுதல் வழங்கி இருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார். கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் ஒரு கோடி ரூபாய் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கினால் மட்டும் போதாது. லூர்து பிரான்சிசை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.