கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை  அட்கோ என்ற பகுதியில் ஒரு உணவுவிடுதியில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல் உள்ளது மற்றும் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் உணவு விடுதி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு வாடிக்கையாளர்கள் புகார்மனு ஒன்றை  கொடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட உணவுவிடுதி மற்றும் ஓசூர் பகுதியில் உள்ள பல்வேறு உணவு விடுதிகளில்  ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஆய்வு மேற்கொண்டுள்ள அதிகாரிகள் கூறியுள்ளதாவது, புகார் வந்த உணவு விடுதியில் இருந்து இட்லிகளை மாதிரிக்காக சேகரித்தோம். இந்நிலையில் சம்பத்தப்பட்ட  ஓட்டலுக்கு சென்று இட்லி தயார் செய்யும் இடத்தை  நேரடியாக ஆய்வு செய்தோம். அப்போது அங்கு இருந்த இட்லி மாவு மற்றும் இட்லிகள் ஆய்வுக்காக பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் 21 நாட்களில் தெரியவரும். அதில் ஏதேனும் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டது உறுதியானால் சம்பந்தபட்டவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.