அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான டெஸ்லா, சமீபத்தில் காட்சிப்படுத்திய ஆப்டிமஸ் ரோபோக்கள், மனிதர்களின் எடுபிடி வேலைகளை மிக எளிமையாகச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “வீ ரோபாட்” என்ற நிகழ்ச்சியில், இந்த ரோபோக்கள் பார்வையாளர்களின் முன்னிலையில் பல தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தின. இந்நிகழ்ச்சி, கலிபோர்னியாவில் நடைபெற்றது. இதில் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மற்றும் பல தொழில்நுட்ப ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் முக்கிய வேலைகள் என்பது, வீட்டுக்குள் உள்ள எடுபிடி வேலைகளை செய்து முடிப்பதாகும். பாத்திரம் கழுவுதல், வீட்டை சுத்தம் செய்வது, அலமாரி அடுக்குவது போன்ற பல வேலைகளை, இவை தானாகவே செய்கின்றன. மேலும், குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டுதல், வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சிக்கு செல்வது போன்ற நெருக்கமான சேவைகளையும் வழங்குகின்றன. இதனால், இது ஒரு வேலை செய்யும் கருவியாக மட்டுமல்ல, ஒரு நெருக்கமான நண்பனாகவும் செயல்படும்.

ரோபோக்கள், பார்வையாளர்களின் முன்னிலையில் நடனம் ஆடி வரவேற்பு செய்தது மட்டுமல்லாமல், உணவுகள் மற்றும் பானங்களை வழங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய இந்த ஆப்டிமஸ் ரோபோக்கள், ரிமோட் மூலம் இயக்கப்படுகின்றன. இதன் திறமைகள் மற்றும் செயல்பாடு, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியன.

எலான் மஸ்க் இந்நிகழ்ச்சியில் பேசும்போது, இந்த ரோபோக்கள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் பல திறமைகளை கொண்டுள்ளதைக் கூறினார். “இவை கற்றுக்கொடுக்கலாம், பேசலாம், வேலைகளை நேர்த்தியாகச் செய்யலாம்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், இவை ஒரு மனிதனுடன் நெருங்கிப் பழகும் ஒரு சாதனமாக திகழும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆப்டிமஸ் ரோபோக்களின் விலை, இந்திய மதிப்பில் 17 லட்சம் ரூபாயிலிருந்து 26 லட்சம் ரூபாய் வரையிலும் இருக்கும். இதன் தொழில்நுட்பம், திறமைகள், மற்றும் செயல்பாடு அனைத்தும், வருங்காலத்தில் மனிதர்களின் வீட்டு வேலைகளை சுலபமாக்கும் ஒரு புதிய அடையாளமாக மாறும் என்ற நம்பிக்கையை டெஸ்லா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.