திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காவேரியம்மாபட்டி பகுதியில் விவசாயியான மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது தந்தை வேல்சாமி ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் மாரிமுத்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் 8000 ரூபாய் வழங்குவதாக மாரிமுத்து ஒப்புக்கொண்டார்.

ஆனாலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மாரிமுத்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மாரிமுத்து பாண்டியராஜனிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாண்டியராஜனை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டியராஜனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.