கடந்த வெள்ளிக்கிழமை அரசு புது ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) மேம்படுத்துவதற்காக நிதிச் செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. புது ஓய்வூதிய திட்டத்துக்குரிய புதிய அணுகுமுறை மத்திய-மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் அடிப்படையில் வடிவமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களும் அகவிலைப்படி இணைக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) திரும்பப்பெற முடிவு செய்ததன் விளைவாகவே இம்முடிவை அரசு எடுத்து உள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தினை திரும்பபெற பல மாநிலங்களிலுள்ள ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 2004-ஆம் வருடம் ஜனவரி 1-ம் தேதி (அ) அதற்கு பின் மத்திய அரசில் சேரும் ஆயுதப்படை அதிகாரிகளை தவிர்த்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

அதோடு சில மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களும் அவர்களது புது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை, மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் தவிர்த்து 26 மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருக்கிறது. ஓய்வூதிய சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், அரசாங்கம் 2003ல் பிஎஃப்ஆர்டிஏ-வை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.