திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆரைகுளத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சங்கர் தனியார் டிவியில் கேமராமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நிலவில் சந்திராயன் மூன்று விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியது. இதனால் திருவனந்தபுரத்தில் இருக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் பேட்டி எடுப்பதற்காக சங்கர் தனது சக ஊழியர்கள் உள்ளிட்ட மூன்று பேருடன் காரில் சென்றார். இந்தநிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி மறுகால்குறிச்சி விலக்கு பகுதியில் சென்ற போது நிலைதடுமாறிய கார் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நாகராஜன், வள்ளிநாயகம், நாராயணமூர்த்தி ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விபத்தில் இறந்த தனியார் டிவி கேமரா மேன் சங்கரின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்த மூன்று பேருக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்க உத்தரவு பிறப்பித்தார். நேற்று திருநெல்வேலி மாவட்ட உதவி கலெக்டர் கார்த்திகாயினி சங்கரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி 5 லட்ச ரூபாய் பணத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார்.