இந்தியா முழுவதும் 800 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு முதல் 29 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இந்த சுங்க கட்டண உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் சுங்கச்சாவடி கட்டண உயர்வால் அத்யாவசிய பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மத்திய அரசு சுங்கச்சாவடிகளில் உயர்த்தப்பட்டுள்ள கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கட்டண உயர்வால் சரக்கு போக்குவரத்தில் கூடுதல் செலவினம் ஏற்படும். மேலும் வாடகைக்கு செல்லும் வாகன கட்டணமும் உயரும் என்று பதிவிட்டுள்ளார்.