கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கரையம்பாளையம் புதூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தங்கமணி(54) நேற்று முன்தினம் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தங்கமணியின் உறவினரான மளிகை கடை உரிமையாளர் கன்னியப்பன்(29) என்பவரை பிடித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு தங்கமணி தனது உறவினரான கன்னியப்பனுக்கு வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்தார். அதன் பிறகு கன்னியப்பன் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. இதனால் தங்கமணி பணத்தை கேட்டு தொந்தரவு செய்தார். எனவே கன்னியப்பன் தனது நண்பரான குமரன்காடு பகுதியை சேர்ந்த கட்சி தொழிலாளி சுதாகருடன் தங்கமணியின் வீட்டிற்கு சென்று வழக்கம் போல பேச்சு கொடுத்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

அப்போது தண்ணீர் எடுத்து வருவதற்காக தங்கமணி சமையல் அறைக்கு சென்றுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கன்னியப்பனும், சுதாகரும் இரும்பு கம்பியால் தங்கமணியை தாக்கி இரும்பு உளியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.