கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கே.ஆர் புரம் பகுதியில் செந்தில் வடிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். இந்நிலையில் செந்தில் வடிவேலுக்கு முகநூல் மூலம் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது. அந்த நபர் தான் ஆன்லைனில் வர்த்தகம் செய்து வருவதாகவும், அதிக முதலீடு செய்தால் மாதம் தோறும் 10 முதல் 20% வரை லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி செந்தில் வடிவேல் 1 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த நபர் லாப தொகையை கொடுக்கவில்லை. ஏற்கனவே கொடுத்த பணத்தையும் திரும்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில் வடிவேல் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த நவீன் குமார் என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.