சென்னை மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டை ஷாஜி முகமது அப்பாஸ் தெருவில் ராகேஷ் குப்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தேஜா குப்தா(7) வேப்பேரியில் இருக்கும் தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராகேஷ் குப்தா தனது மகனை பெரியமேட்டில் இருக்கும் மை லேடி பூங்கா நீச்சல் குளத்தில் பயிற்சிக்காக சேர்த்து விட்டுள்ளார். தினமும் தேஜா குப்தாவை அவரது தாத்தா சசிகுமார் நீச்சல் பயிற்சிக்கு அழைத்து சென்று வருவார்.

நேற்று முன்தினம் பயிற்சியாளர்கள் சுமன், செந்தில்குமார் முன்னிலையில் சிறுவன் 20 நிமிடமாக 4 அடி ஆழமுள்ள இடத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயிற்சியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் தேஜா குப்தா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுவன் உயிரிழந்த நீச்சல்குளம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது. அதனை தனியார் நிறுவனத்தினர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அஜாக்கிரதையாக இருந்த பயிற்சியாளர்கள் செந்தில்குமார், சுமன், உயிர் காப்பாளர் பிரேம்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில் உயிர் காப்பாளர் பிரேம்குமார் சம்பவம் நடந்த அன்று தான் வேலைக்கு சேர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.