சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் ரெட்டி குப்பம் எம்.ஜி.ஆர் நகரில் சர்மிளா என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராவல்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெரவள்ளூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கர்நாடகா உள்ளிட இடங்களுக்கு செல்ல டிக்கெட் போடுவதற்காக வருவது வழக்கம். இந்நிலையில் கார்த்திகேயன் பணம் கொடுத்தால் எனக்கு தெரிந்த அதிகாரிகளை வைத்து அரசு வேலை வாங்கிவிடலாம் என சர்மிளாவிடம் கூறினார்.

இதனை நம்பி சர்மிளா அவரது தம்பி மோகனுக்கு வேலை வாங்கி தருமாறு கூறினார். இதனை தொடர்ந்து சர்மிளாவின் தம்பி மோகன், அவரது நண்பர்களான தினேஷ், பிரசாத் ஆகிய மூன்று பேரும் கார்த்திகேயனின் தோழியான யமுனாவின் வங்கி கணக்கிற்கு 18 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தனர். ஆனால் கூறியபடி கார்த்திகேயன் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார்.

இதுகுறித்து சர்மிளா திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயன் மற்றும் யமுனாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது பணத்தை வாங்கி கார்த்திகேயன் ஒரு கார் வாங்கி யமுனாவுடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றி வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.