சேலம் மாவட்டத்தில் உள்ள மணக்காடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண் ஆன்லைன் நிறுவன செயலியில் தனது மகளுக்கு 400 ரூபாய்க்கு சுடிதார் ஆர்டர் செய்தார். இதனையடுத்து முகவரியை பதிவு செய்து கேஷ் அண்டு டெலிவரி கிளிக் செய்துள்ளார். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து ஒருவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சுடிதார் டெலிவரி செய்தார். இதனை தொடர்ந்து ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர் நீங்கள் 400 ரூபாய்க்கு சுடிதார் வாங்கியதற்கு 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்திருக்கிறது என கூறினார்.

மேலும் உங்களுக்கு புதிய கார் வேண்டுமா? அல்லது 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் வேண்டுமா? என கேட்டு அதற்காக 10,500 ரூபாய் அனுப்பி வைக்குமாறு அந்த நபர் தெரிவித்தார். இதனால் சுதாரித்துக் கொண்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பணத்தை பறிக்க முயன்ற கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.