
இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவியதால் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற 18 வது ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் பஞ்சாப், டெல்லி அணிகள் இடையான ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 10.1 ஓவர்களில் இந்த ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.
அதன் பின் இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிவுக்கு வந்த நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வருகிற 17-ஆம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்தது. மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் போன்று பாதியில் நிறுத்தி வைக்கப்பட்ட 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 போட்டி ஐபிஎல் தொடங்கும் அதே நாள் மீண்டும் தொடங்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த போட்டி 25ஆம் தேதி வரை மொத்தம் 8 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. பாதுகாப்பு அச்சத்தால் ஊர் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவார்களா? என்பதில் சந்தேகம் நிலவுகிறது.