பாகிஸ்தான் அணி தனது 500வது ஒருநாள் வெற்றியை பதிவு செய்துள்ளது..

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் 500 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் 500 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற 3து அணி என்ற பெருமையை பாகிஸ்தான் அணி பெற்றுள்ளது. மொத்தமாக 594 ஒருநாள் வெற்றிகளுடன், ஒருநாள் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. அதே நேரத்தில், இந்தியா இந்தப் பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய அணி இதுவரை 539 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் 411 வெற்றிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகள் :

1. ஆஸ்திரேலியா – 594 போட்டிகள்

2. இந்தியா – 539 போட்டிகள்

3. பாகிஸ்தான் – 500 போட்டிகள்

4. வெஸ்ட் இண்டீஸ் – 411 போட்டிகள்

5. தென்னாப்பிரிக்கா – 399 போட்டிகள்

பாகிஸ்தான் vs நியூசிலாந்து போட்டியின் நிலை :

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில், டாஸ் இழந்த நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்  செய்தது. நியூசிலாந்து அணியில்  அதிகபட்சமாக டேரில் மிட்செல் 113 ரன்களும், வில் யங் 86 ரன்களும் எடுத்தனர். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் ஆகிய 3 பேரும் தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேலும் ஷதாப் கான் 1 விக்கெட் வீழ்த்தினார்.

நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஃபகார் ஜமான் 117 ரன்களும், இமாம் உல் ஹக் 60 ரன்களும் எடுத்தனர். இந்தப் போட்டியில் கேப்டன் பாபர் அசாம் (49 ரன்கள்) 1 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.