பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம் ஆகிய படங்களை அடுத்து டைரக்டர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் “பகாசூரன்”. இதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாகவும், ஒளிப்பதிவாளர் நட்டி எனும் நடராஜ் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளனர். சாம் சிஎஸ் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் ராதாரவி, தயாரிப்பாளர் ராஜன், கூல் சுரேஷ், தரக்‌ஷி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.

தன் அண்ணன் மகள் மேற்கொண்ட மர்மமான தற்கொலையை அடுத்து அதற்கான காரணத்தை தேடுகிறார் முன்னாள் மேஜராக வரும் நடிகர் நட்டி. அதே நேரம் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தன் மகளின் இறப்புக்கு காரணமானவர்களை பழிவாங்குகிறார் பீமராசுவாக வரும் இயக்குநர் செல்வராகவன்.

இரண்டு பேரும் சந்திக்கும் புள்ளியே “பகாசூரன்”. கடலூரை சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான செல்வராகவனுக்கு தன் மகளின் மீது கொள்ளைப் பிரியம். அவரது விருப்பத்துக்காக பெரம்பலூர் காலேஜில் சேர்ந்து படிக்க வைக்கிறார். அங்கு அவருக்கு நிகழும் பாலியல் வன் கொடுமையை மையமாக கொண்டே கதைக்களம் இருக்கிறது.

பல்வேறு இடங்களில் செல்வராகவன் சிறப்பாக நடித்துள்ளார். அதாவது, சிவ பக்தராக வரும் இடங்களில் நல்ல நடிகராக ஈர்க்கிறார்.  50 வருடங்களுக்கு முந்தைய சிந்தனையில் இருந்து உருவாகி இருக்கிறது “பகாசூரன்”. பல நூறாண்டுகளுக்கு பின் பெண்கள் தங்களது அடுப்பங்கறையில் இருந்து இப்போது தான் வெளியில் வந்து கல்வி கற்கத் துவங்கி இருக்கின்றனர். இதை பதட்டத்துடன் பார்த்த ஒருவர் எழுதிய கதைக்களமாக வந்திருக்கிறது “பகாசூரன்”.