ஓட்டுநர் உரிமம் பெறுவதற்குரிய விதிகளில் மத்திய சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகமானது திருத்தம் செய்திருக்கிறது. அதன் கீழ் தற்போது மக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று தங்களின் ஓட்டுநர் உரிமத்தை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இனிமேல் மாநிலப் போக்குவரத்து ஆணையம் (அ) மத்திய அரசு நடத்தும் ஓட்டுநர் பயிற்சி மையம் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்படும்.

அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்துக்கு ஓட்டுநர் உரிமத்துக்கான தேர்வை எழுதுவதற்கான உரிமையை அரசாங்கம் தற்போது வழங்கி உள்ளது. ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த ஓட்டுநர் பயிற்சி மையங்களில் ஏதேனும் ஒன்றில் தங்களை பதிவுசெய்து கொண்டு அவர்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

தேர்வு முடிந்தவுடன் மையம் சான்றிதழ் வழங்கும். சான்றிதழைப் பெற்றபின் விண்ணப்பதாரர் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்கலாம். இது ஆர்டிஓவில் எந்த சோதனையும் இன்றி பயிற்சி சான்றிதழின் அடிப்படையில் வழங்கப்படும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் பிரத்யேக பயிற்சி மையங்களில் சிமுலேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் மற்றும் டிரைவிங் டெஸ்ட் டிராக்குகள் இருக்கும். இம்மையங்கள் இலகுரக மோட்டார் வாகனங்கள் (LMV), நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் (HMV) போன்றவற்றுக்கான பயிற்சியை வழங்க இயலும். LMV-க்கான பயிற்சியின் மொத்த கால அளவு 29 மணி நேரம், நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்படும்.