
ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனந்தராக் மாவட்டத்தில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி தாக்குதலை நடத்தியது. அந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் துல்லிய தாக்குதலில் 9 பயங்கரவாத உட்காட்டு அமைப்புகள் அழிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே போர்பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பாலிவுட்டில் பயன்படுத்துவதற்காக பலரும் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரிலேயே பாலிவுட்டில் ஒரு புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அந்தப் படத்தை நிக்கி விக்கி பக்கானிக் ஃபிலிம்ஸ் மற்றும் தி கன்டென்ட் இன்ஜினியர் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் போஸ்டரில் பெண் ஒருவர் ராணுவ அதிகாரியாக நெற்றியில் குங்குமம் வைப்பது போல ஒரு கையில் துப்பாக்கியுடன் காட்டப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பெயரை பயன்படுத்த பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்ட நிலையில் தற்போது இந்த தலைப்பை பயன்படுத்தி படம் இயக்கவிருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்து வரும் நிலையில், இது போன்ற நாட்டின் முக்கியமான விஷயங்களை பணமாக்குவதை நிறுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நீக்கியது.
அதன்பின் திரைப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் படத்தின் போஸ்டரை நீக்கி மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குனர் உத்தம் மகேஸ்வரி கூறியதாவது, “இந்த நேரத்தில் இது போன்ற அறிவிப்புக்கு அனைவரும் மன்னிக்க வேண்டும் எனவும், அந்தப் போஸ்டர் யாரையும் காயப்படுத்தும் நோக்கத்தில் வெளியிடப்பட்டது அல்ல. அது நமது வீரர்களின் தைரியம், தியாகம் வலிமையை உலகிற்கு வெளி கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியாகும்” என மன்னிப்பு பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரும், “நமது வீரர்களின் தியாகம், தைரியம் மற்றும் வலிமையை வெளிக்கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் அது. நமது நாட்டின் மீது உள்ள மரியாதை மற்றும் அன்பால் உருவாக்கப்பட்ட திட்டம் அது. வெறும் புகழ் மற்றும் பணத்துக்காக அல்ல. இருப்பினும், கால நேரம் கருதி சிலருக்கு அது அசவுகரியத்தையோ அல்லது வலியையோ ஏற்படுத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என பதிவிட்டார்.