தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றியது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளார். அதன் பிறகு தடைச் சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு தான் இருக்கிறது மாநில அரசுக்கு கிடையாது என்று ஆளுநர் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது கூட்டணி கட்சிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் ஆளுநருக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக எம்.பி டி.ஆர் பாலு நாடாளுமன்ற மக்களவையில் ஆன்லைன் ரம்மி குறித்து விவாதிக்க வேண்டும் என 3 முறை கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தினால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இதை தடை செய்ய வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.‌ மேலும் இது குறித்து 3 முறை ஏற்கனவே கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது 4-வது முறையாக மக்களவைக்கு டி.ஆர் பாலு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.