ஈரோட்டில் இருந்து அமிலம் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை தேவராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி புதுப்பாலம் அருகே இரவு 2 மணி அளவில் லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென பழுதாகி நின்று விட்டது.

இதனால் தேவராஜ் லாரியை நகர்த்த முயற்சி செய்தார். ஆனால் அவரால் இயலவில்லை. இதனால் தேவராஜ் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓரமாக நின்று கொண்டிருந்தார். அந்த லாரியில் விளக்குகள் எதுவும் இல்லை. அதே நேரம் சுந்தரராஜ பெருமாள் என்பவர் கோவையிலிருந்து தேனி நோக்கி அரசு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். அதிகாலை 4 மணிக்கு இருட்டில் லாரி நிற்பதை அறியாமல் சுந்தரராஜன் பெருமாள் ஓட்டி சென்ற அரசு பேருந்து லாரி மீது பயங்கரமாக மோதி சுக்குநூறாக நொறுங்கியது.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த சுந்தரராஜ பெருமாள் உள்பட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கோவையைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.