
பிரிட்டனில் நடைபெறும் ஹண்ட்ரெட் லீக் டிராஃப்டில் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நசீம் ஷா, சையம் அயூப், ஷதாப் கான் உள்ளிட்ட 50 பாகிஸ்தான் வீரர்கள் இந்த டிராஃப்டில் இடம் பெற்றிருந்தனர். இதில் 45 ஆண்கள், 5 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். GBP 120,000 பவுண்ட் அதிகபட்ச அடிப்படை விலைக்குள் நசீம் ஷா, ஷதாப் கான் ஆகியோர் இருந்தும், அவர்களுக்கு ஏலம் எதுவும் வரவில்லை. இதேபோல், GBP 78,500 விலைக்குள் இருந்த சையம் அயூப் உள்ளிட்ட வீரர்களும் எந்த அணியிலும் சேர்க்கப்படவில்லை.
இந்த ஆட்டக்காரர்களுக்கு ஏலம் வராததற்கு, பல்வேறு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஐபிஎல் (IPL) அணிகள், ஹண்ட்ரெட் அணிகளில் பங்கு வைத்துள்ளமை, முக்கிய காரணமாக இருக்கலாம் எனும் கருத்து எழுந்துள்ளது. தற்போது மும்பை இந்தியன்ஸ் (Oval Invincibles), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Manchester Originals), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Northern Superchargers), டெல்லி கேப்பிட்டல்ஸ் (Southern Brave) ஆகியவை ஹண்ட்ரெட் அணிகளில் பங்குதாரர்களாக உள்ளன. மேலும், இந்திய அமெரிக்க தொழிலதிபர் சஞ்சய் கோவில், “வெல்ஷ் ஃபயர்” அணியில் 50% பங்கு வாங்கியுள்ளார். இது பாகிஸ்தான் வீரர்களுக்கு வாய்ப்பு குறைந்ததற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் சமீபத்திய வெள்ளை பந்து (white ball) கிரிக்கெட் தோல்விகளும், முக்கியமான வீரர்கள் ஐபிஎல், பிக்பாஷ் போன்ற லீக்களில் தொடர்ந்து சிறப்பாக விளையாடாமல் இருந்ததும், அவர்கள் ஏலம் பெறாததற்கான காரணமாக இருக்கலாம். மேலும், கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அந்நாட்டு வீரர்களுக்கான NOC (No Objection Certificate) வழங்க மறுத்து, பாகிஸ்தான் வீரர்கள் ஹண்ட்ரெட் லீக்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவாகியது. இதனால், அணிகள் பாகிஸ்தான் வீரர்களை விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.