கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தர்ஷன். இவருக்கு சொந்தமான பண்ணை வீடு மைசூர் மாவட்டத்தில் உள்ள கெம்பய்யனஹுண்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் தர்ஷன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகளை வளர்க்கிறார். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் நேற்று இரவு வனத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் போது 4 அபூர்வ வெளிநாட்டு வகை வாத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வாத்துக்களை இந்திய வன சட்டப்படி வீட்டில் மற்றும் பூங்காக்களில் வளர்ப்பது குற்றமாகும். அதன் பிறகு வீட்டில் விலங்குகளை வளர்க்க வேண்டுமானால் அதற்கு உரிய முறையில் அனுமதி பெறுவதும் கட்டாயம். இந்நிலையில் தர்ஷன் வீட்டில் வளர்த்து வந்த வாத்துகளை வனத்துறையினர் மீட்டதோடு அதை சுதந்திரமாக ஏரி பகுதியில் விடுவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற இருக்கிறார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தர்ஷன் மீது வழக்கு பதிவும்  செய்யப்பட்டுள்ளது.