சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது ஆகும். இங்குள்ள கடைகள், குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடம் மிகவும் சிதலமடைந்து இருப்பதால் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் என உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் அங்கு குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு அங்கு இருந்த மருந்து கடையும் இடமாற்றம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் பெய்த கனமழை காரணமாக நேற்று கட்டிடம் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளுக்கு அருகில் யாரும் சென்று விடாமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.